கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம், பொன்னூத்து போன்ற கிராமப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனக் கூறப்படுகிறது. இதில் யானைகள் இரவு நேரங்களில் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதியிலும் புகுந்து வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் வரப்பாளையம் கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி என்பவர் தனது தோட்டத்தில் சோளம் பயிரிடப்பட்டிருந்ததால் அதனைப் பாதுகாக்க வீட்டு வாசலில் மின் வேலிகள் அமைத்துக் கொண்டிருந்தார். அவை செயல்படுகிறதா எனத் தெரிந்துகொள்ள வீட்டின் முன் பகுதியில் நின்றுகொண்டு அந்த மின் வேலிகளைச் சோதனை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத சமயத்தில் அவ்வழியாக திடீரென வந்த காட்டு யானை ராமசாமியைத் தாக்க வந்துள்ளது. பின்னர், காட்டு யானையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் ஓடி வந்தார். அதன்பிறகு, ராமசாமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த நபர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் ''நாள்தோறும் காட்டு யானைகள் எங்கள் ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் காட்டு யானைகளால் எங்களது வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுவதாக” அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.