பவானி பகுதியில் வனத்திலிருந்து வெளியே வந்த ஒற்றை யானை சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்று கடைகளை உடைக்க முயலும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே குடியிருப்புப் பகுதியில் திடீரென காட்டு யானை ஒன்று புகுந்தது. மெதுவாக நடந்து மெயின் சாலையைக் கடந்த யானை, அங்கு சாலையோரம் இருந்த ஒவ்வொரு கடைகளுக்கும் வரிசையாகச் சென்று தாழிடப்பட்டிருந்த கடையின் கதவுகளை உடைக்க முயன்றது. இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக கடந்த மாதம் 21 ஆம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்தும் வழக்கை நீக்க கோரியும் நேற்று (7ம் தேதி) கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் நேற்று ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். அதேபோல் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோபி பேருந்து நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பினர். அதேபோல், வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதித்தனர். இதனால் நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.