
உயிரிழந்த கோபால கண்ணன்
குள்ளஞ்சாவடி அருகே முறையற்ற தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை மீன் குழம்பில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அருகே கட்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கோபால கண்ணன் (50) இவருக்கும் திம்மரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயா (48) என்பவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கோபால கண்ணன், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், விஜயாவிற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் முருகேசன் மகன் தேவநாதன் (57) இடையே முறையற்ற தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கோபால கண்ணன் கோவை செல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக கட்டியங்குப்பத்திலேயே தங்கிவிட்டார்.

கைது செய்யப்பட்ட விஜயா, தேவநாதன்
இந்நிலையில் கணவன் மனைவி இருவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வழக்கம் போல் புதன்கிழமை மாலை மனைவி விஜயாவுடன் சண்டை போட்டு விட்டு கோபால கண்ணன் அங்கிருந்து சென்றுவிட்டாராம். விஜயாவும் மேற்கு தெருவில் இருந்து ஒரு பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து வீடு திரும்பிய கோபால கண்ணன், மனைவி விஜயா சமைத்து வைத்த மீன் குழம்பை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் விஜயா வீடு வந்து பார்த்தபோது கோபால கண்ணன் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தாராம். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கோபால கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து கோபாலகண்ணன் தந்தை ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது மருமகள் விஜயாவுக்கும், எங்கள் ஊர் முருகேசன் மகன் தேவநாதன் என்பவருக்கும் முறையற்ற தொடர்பு இருப்பதை கேள்விப்பட்டு மகனிடம் சொன்னேன். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். புதன்கிழமை மாலை மகனுக்கும் மருமகளுக்கும் வாய் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மருமகள் விஜயாவும், தேவநாதனும் சேர்ந்து வீட்டில் இருந்த நெல்லுக்கு அடிக்கும் மருந்தை சமைத்து வைத்திருந்த மீன் குழம்பில் கலந்து கொடுத்து எனது மகனை கொலை செய்து விட்டனர். எனது மகனை கொலை செய்த விஜயா, தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் (பொ) ராஜதாமரை பாண்டியன், எஸ்ஐ உலகநாதன் வழக்கு பதிவு செய்து விஜயா, தேவநாதன் ஆகியோரை கைது செய்தனர்.