சிவகாசியைச் சேர்ந்த பிரேம்குமார் – கதிரேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், 9 வயதில் விஜயகுமார் என்ற மகனும் 3 வயதில் விஜயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மகள் விஜயஸ்ரீக்கு காய்ச்சல் இருந்துள்ளது. மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி பிரேம்குமார் கூற, வேண்டாமென மறுத்துள்ளார் கதிரேஸ்வரி. அன்றிரவு மகளுக்கு கதிரேஸ்வரி தோசை சுட்டுக் கொடுத்தபோது, “காய்ச்சல் அடிக்கிற பிள்ளைக்கு இட்லிதானே கொடுக்க வேண்டும்...” என்று மனைவியைச் சத்தம் போட்டுள்ளார் பிரேம்குமார். அதனால் கோபித்துக் கொண்ட கதிரேஸ்வரி, “மொதல்ல நீங்க மெடிக்கலுக்கு போயி மாத்திரை வாங்கிட்டு வாங்க...” என்றிருக்கிறார். அதற்கு பிரேம்குமார், “எனக்கு ஆஞ்சியோ பண்ணிருக்குன்னு உனக்குத் தெரியும். மாத்திரை வாங்கணும்னா நான் வீட்டுக்கு வருவதற்கு முன்பே ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாமே...” என்று பிரேம்குமார் கூற, தன்னுடைய செல்போன் காணாமல் போய்விட்டதாகப் பதிலளித்திருக்கிறார் கதிரேஸ்வரி.
இதையடுத்து கோபமான பிரேம்குமார், “நீ வீட்லதானே இருக்க. செல்போனை பத்திரமா வச்சுக்கிட மாட்டியா?” என்று குரலை உயர்த்திக் கேட்டிருக்கிறார். இதனால் விரக்தியான கதிரேஸ்வரி, அன்றைய தினம் நள்ளிரவு தாண்டி சீலிங் ஃபேனில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கணவர் பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.