திருமண ஆசை காட்டி திருமணத்திற்கு முன்பே பாலியல் அத்துமீறல் செய்த காதலன், தாலி கட்டிய பின் சில நாட்களிலேயே ஓட்டம் பிடித்ததால் ஏமாந்து போன பெண் ஆசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காதல் கணவன், அவருடைய பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் சுகன்யா (28). தனியார் பள்ளி ஆசிரியர். இவர், நவ. 20 ஆம் தேதி, சேலம் பச்சைப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள கோகுல் (27) என்பவர் வீட்டிற்குச் சென்று, திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், ''கோகுல் என்னை காதலித்து, திருமண ஆசை காட்டி, பாலியல் உறவு கொண்டார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். பின்னர் அவர் சொன்னதன் பேரில் வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைத்துவிட்டேன். அதையடுத்து என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார்'' என்றார்.
கோகுலின் பெற்றோர் வீட்டுக்கு வெளியே வந்து சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் கோகுல் மீது புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் “கோகுலும் நானும் காதலித்து வந்தோம். கடந்த 2019 ஆம் ஆண்டு என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால் கர்ப்பம் அடைந்தேன். பின்னர் அவர் என் வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்துவிட்டார். இதையடுத்து சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்டினார். சில நாள்கள் மட்டுமே என்னுடன் குடும்பம் நடத்தினார். பின்னர் தாலியைக் கழற்றிவிட்டு என்னை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, இனிமேல் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லிவிட்டு பிரிந்து சென்று விட்டார். கோகுலின் பெற்றோரும், அவருடைய அண்ணனும் என்னை ஆபாசமாக பேசுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை நடத்தி, காதலன் கோகுல், அவருடைய தாயார் ரேணுகாதேவி, தந்தை ரவி, அண்ணன் சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது சாதி வன்கொடுமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக சேலம் நகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் விசாரணை நடத்தி வருகிறார். கோகுல் மீது ஏற்கனவே சுகன்யா ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், கோகுல் முன்பிணை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து கோகுலின் பெற்றோரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சேலம் பச்சைப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.