Skip to main content

சப் இன்ஸ்பெக்டர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்..! 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

  wife complains about sub-inspector in viluppuram


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார் இளங்கோவன் (35). இவரது மனைவி இந்துமதி (30). இவர், நேற்று (17.06.2021) மதியம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நேரடியாக நடத்திய விசாரணையில், இந்துமதி கூறியதாவது; “2019ஆம் ஆண்டு எனக்கும் தற்போது அவலுர்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இளங்கோவனுக்கும் திருமணம் நடந்தது. 

 

திருமணம் முடிந்த 5 மாதத்தில் எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு, பிரச்சனை ஏற்பட்டுவந்தது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறினார்கள். இதன் பிறகு எனது கணவர் இளங்கோவன், எனது பெற்றோரிடமிருந்து 100 சவரன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு தகராறு செய்தார். எப்படி நமது மகளை வைத்து நல்ல முறையில் வாழ்வார் என்ற காரணத்தினால், எனது பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை எனது கணவர்  பெயருக்கு எனது பெற்றோர் எழுதிக் கொடுத்தனர். அதன் மதிப்பு 2 கோடி ரூபாய். ஆனால், அதன் பிறகும் என்னுடன் வாழாமல் அவலூர்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.

 

அவர் ஆரோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது சம்பாதித்த பணத்தில் நிலம், வீடு வாங்கியுள்ளார். அவை அனைத்தையும் அவரது தங்கை பெயரில் எழுதிவைத்துள்ளார். அவரது தங்கை கணவர், காஞ்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். அவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். எங்கள் உறவினர்கள் பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி என்னோடு சேர்ந்து என் கணவர் வாழ்வதற்கு முயற்சி செய்தனர். அவர் ஒத்துவரவில்லை. இதற்கு மேலும் பொறுப்பதில் பயனில்லை என்று முடிவு செய்தேன். ஏற்கனவே  இங்கு வந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

 

இதன்பிறகு என் கணவர் என்னை மேலும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். குடும்ப வாழ்க்கை என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்தேன். இனி எனது கணவருடன் சுமுகமான முறையில் சேர்ந்து வாழவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அவர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மனைவி இந்துமதி கூறினார். 

 

அவர் இளங்கோவனுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டுச் சென்றார். புகாரை வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்து அவரது மனைவியை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் மீது, அவரது மனைவியே பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறி புகார் அளித்துச் சென்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.