தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் சில தினங்கள் முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தார்.
இந்நிலையில் இன்று கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் இல்லாமல் காலியாக அதிக இடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஆண்டு பல்வேறு முறைகளை பின்பற்றி பலகட்டங்களாக கலந்தாய்வை நடத்துகிறோம். இன்று நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் 5165 பேரில் 2671 பேர் அண்ணா பல்கலைக்கழகம் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுவதால் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கும். அதனை தடுக்கவே இந்த ஆண்டு கல்லூரிகளை தேர்ந்தெடுத்த பின் சேர்க்கை உத்தரவு 15ம் தேதி கொடுக்கப்படும். அதன் பின் ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்" என கூறினார்.