வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்..? என விஜய் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்கள், 411 பெண் வேட்பாளர்கள், இரண்டு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார். அவர் வந்ததைக் கண்ட அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விஜய்யை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தனது வாக்கைச் செலுத்தினார்.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே விஜய் சைக்கிளில் வந்ததாக சமூகவலைத்தளங்களில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்து விஜய் தரப்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "விஜய் சைக்கிளில் ஒட்டுப் போட வந்ததிற்கு ஒரே ஒரு காரணம் தான். வாக்குப்பதிவு மையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது. அது ஒரு சின்ன தெரு என்பதால் காரில் சென்று வருவது இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.