நீதிபதிகளை அவதூறாகப் பேசிய விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து, சென்னை மற்றும் கொல்கத்தாவில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் பேசியிருந்த வீடியோ, யூ-டியூப் வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. நீதிபதிகளையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் விமர்சிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் தேவிகா என்பவர் புகாரளித்திருந்தார். அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாகவும் புகாரளிக்கப்பட்டது. ஆனால், கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில், இதற்கு முன்னான விசாரணையில், புகாரின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையர் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ஓய்வு பெற்ற நீதிபதியிடம், 2 நாட்கள் விசாரணை நடைபெற்றதாகவும், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்ததாகவும், இனி இதுபோன்று வீடியோ வெளியிட மாட்டேன் எனக் கர்ணன் கூறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், காவல்துறையின் இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், அவர் அவதூறு பரப்பியதற்கான வீடியோ ஆவணங்கள் ஆதாரமாக இருக்கும் நிலையில், அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் வரும் டிசம்பர் 7 -ஆம் தேதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.