
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை ஒவ்வொரு கட்சியும் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொடர்ந்து பல மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் 'எம்.ஜி.ஆரின் நீட்சி நான்'' என அவர் கூறியதற்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்ததோடு, கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "தொடர்ந்து பரப்புரையில் ஈடுபடும் கமல்ஹாசன் திமுகவை விமர்சிக்காதது ஏன்? எம்.ஜி.ஆர் ஆட்சித் தருவேன் எனக் கூறும் கமல், கலைஞர் ஆட்சித் தருவதாக ஏன் கூறவில்லை. தேர்தல் பரப்புரையில் இப்படி ஒருசாராரை பற்றி மட்டும் பேசுவதால் அவர் மீதுள்ள நம்பகத்தன்மை குறையும்" எனத் தெரிவித்துள்ளார்.