குரூப் 2 முதன்மைத் தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் குரூப்2 தேர்வுக்கான பொது அறிவு தேர்வை ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் எழுதியுள்ளனர். தொடர்ந்து தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதாக கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2023-24 ஆம் ஆண்டில் சுமார் 10,000 பேருக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக பணியானை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் குரூப் 4 தேர்வு மூலமாகத் தேர்வானவர்களுக்கு முதல்வர் கொடுத்துள்ளார். குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்து தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணி சுமார் 80 விழுக்காட்டிற்கு மேல் நிறைவுபெற்றுள்ளது. தாமதத்திற்கு இரண்டாவது கணினி ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்றதுதான் காரணம். டிசம்பர் முதல் வாரத்தில் சுமார் 6000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.