நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் குஷ்புவிற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி (27.02.2024) குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்
இத்தகைய சூழலில் தான் குஷ்பு வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரின் ராஜினாமா கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. குஷ்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி தனது ராஜினாமா கடித்ததை துறை அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அதன் மீதான நடவடிக்கையாக ஜூலை 30ஆம் தேதி அவரது ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து குஷ்பு விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில், “என்னைப் பதவியில் இருந்து விலக யாரும் வலியுறுத்தவில்லை. எனது ராஜினாமா முடிவு குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பேச ஆரம்பித்துவிட்டேன். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருப்பதால் கட்சி பணிகளில் செயல்பட முடியவில்லை. இது தொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரிடம் பேசினேன். அவர்கள் இதற்கு சில காலம் பொறுத்திருக்கும்படி கூறினார்கள். இதனையடுத்து கடந்த மாதம் ராஜினாமா கடிதத்தைக் கொடுங்கள் என்று கூறினார். அதன்படி கடந்த மாதம் கடிதத்தைக் கொடுத்தேன். நேற்று தான் அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.