தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம் கண்டக்காடு என்ற கிராமத்தில் ஃபெஞ்சல் பயலால் பாதிக்கப்பட்ட பாமக சார்பில் இன்று (08.12.2024) மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களின் உடல் நிலையை பாமக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பரிசோதனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சாதாரணமாக சாத்தனூர் அணையில் இருந்து நீர், கடலூர் வருவதற்கு ஒரு நாள் அல்லது ஒன்றை நாட்கள் ஆகும். ஆனால் இப்போது தென்பனையாற்றில் மணல் கிடையாது. மணல் கொள்ளையால் மணல் இல்லாத சூழலால் ஆறிலிருந்து எட்டு மணி நேரத்தில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் உயிரைப் பாதுகாக்க வெளியேறினார்கள். அவர்கள் உடைமைகள் அழிந்து விட்டன.
இன்னும் சொல்லப்போனால் 20 ஆயிரத்துக்கு மேல் கால்நடைகள் இறந்து இருக்கின்றன. கடந்த காலத்தில் தானே புயல் வந்த போது கடலூர் மாவட்டம் குடிசை இல்லாத மாவட்டம் என்று அறிவித்தார்கள். அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் சரி கடலூர் மாவட்டத்தில் குடிசை இல்லா வீடுகளைக் கட்டிக் கொடுப்போம் என்று பெயர் சூட்டி திட்டங்கள் வைத்தார்கள். அதற்கும் நிதியும் ஒதுக்கினார்கள். ஆனால் இப்பொழுது 5000 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டதுக்கும் நடைமுறைக்கும் சம்பந்தமில்லை. இந்த ஃபெஞ்சல் புயலால் 4.5 லட்சம் ஏக்கர் (2.10 லட்சம் ஹெக்டேர்) பயிர்கள் அழிந்துள்ளன. இதற்கு முழு நிவாரணம் அரசு கொடுக்க வேண்டும். கால்நடைகள் இழப்பிற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். வீடு, பொருட்கள், இரு சக்கர வாகனங்கள் பழுதடைந்து சேதம் அடைந்துள்ளன. இதனை எல்லாம் அரசு நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
முக்கியமாக, ‘கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கேட்கின்ற கேள்வி எங்களுக்கு ஏன் 2000 ரூபாய் மட்டும் கொடுக்கிறீர்கள். மிச்சாங் புயல் வந்த போது நிவாரணமாகச் சென்னையில் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள். அடுக்கு மாடியில் ஒன்பதாவது மாடியில் இருப்பவர்கள் வெள்ளத்தால் பாதிப்பு என்று சொல்லி நிவாரணம் வாங்கி சென்றார்கள். கடந்த ஆண்டு தூத்துக்குடியில் வெள்ளம் பாதிப்பு அடைந்தபோது 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் கடலூரில் கடலூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் 2000 ரூபாய் கொடுக்கிறீர்கள். நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா? . அல்லது சென்னை மக்கள் புண்ணியம் செய்துள்ளார்களா?’ எனக் கேட்கின்றனர். வட தமிழக மக்கள் மீது கோபம் ஏன்?. எனவே நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.