/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/onion-merchant.jpg)
மனிதர்கள் சாதாரணமாகப் பேசும் போது சிலர், "அட போய்யா பெரிய வெங்காயம் மாதிரி பெருசா பேச வந்துட்ட" என்று சொல்லுவார்கள். அதே போல் இப்படி வெங்காயத்தை உதாரணம் காட்டி அலட்சியமாக வார்த்தையை வீசுவார் மறைந்த தந்தை பெரியார்.
இப்படிப்பட்ட இந்த வெங்காயத்தின் வியாபாரத்தில் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்திற்காக ஆள் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் உள்ளது விஸ்வரெட்டிபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் 42 வயது நிரம்பிய சிவகுமார். இவர் அப்பகுதியில் ஒரு வெங்காய வியாபாரி, மொத்தமாக வெங்காயத்தை வாங்கி சிறு வியாபாரிகளுக்கு விற்று வந்துள்ளார். இவர் புதுச்சேரி மாநிலம் கதிர்காமத்தை சேர்ந்த சண்முகம் என்ற மொத்த வெங்காய வியாபாரியிடம் அவ்வப்போது வெங்காயம் கொள்முதல் செய்து வந்துள்ளார்.
அதன்பேரில், சண்முகத்திற்கு சிவகுமார் ஒன்றரை லட்சம் பணம் பாக்கி தர வேண்டி இருந்துள்ளது. இதைப் பலமுறை சண்முகம் கேட்டும், சிவக்குமார் கொடுக்கவில்லை. இந்தநிலையில், நேற்று காலை 11மணி அளவில் சிவகுமார் தனது பைக்கில் விக்கிரவாண்டியில் இருந்து எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, கோணப்பாலம் என்ற இடத்தில் ஏற்கனவே ஸ்கார்பியோ காரில் காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சிவகுமாரை மடக்கித் தரவேண்டிய கடன்பாக்கி தொகைக்காக அவரை பலவந்தமாகக் கடத்த முயன்றுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக முரண்டு பிடித்துப் போராடிய போது அந்த பாலத்திலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார் சிவக்குமார். இதில் அவரது வலது கால் முறிந்தது. இதனைக் கண்டதும், அவரை கடத்த வந்த கும்பல் அங்கிருந்து தப்பி காரில் சென்று விட்டனர். படுகாயமடைந்த சிவகுமாரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் பரணி நாதன், சக போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகுமாரிடமும் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து எஸ்.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிவகுமாரை கடத்த முயன்ற கும்பலைக் கைது செய்வதற்காகத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் சிவகுமாரை கடத்த முயன்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)