லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் ஒரு குட்டி கதை சொன்னார். அவர் பேசியதாவது ''இரண்டு பேர் ஈட்டியுடன் வேட்டைக்கு சென்றார்கள். ஒருத்தர் ஈட்டியில முயல அடிச்சு தூக்கிட்டாரு. இன்னொருத்தர் ஈட்டியை வைத்து யானையை எய்ம் பண்றாரு, எய்ம் பண்றாரு மிஸ் ஆயிட்டே போகுது. அப்ப ரெண்டு பேரும் மீண்டும் ஊருக்குள்ள வராங்க. ஒருத்தர் கையில முயலோட வரார். ஒருத்தர் வெறும் கையில் வேலோட வரார். இவங்க ரெண்டு பேத்துல யாரு ஜெயிச்சாங்க'னு நினைக்கிறீங்க. யார் கெத்து'னு நினைக்கிறீங்க.
அந்த யானையை எய்ம் பண்ணி தவற விட்டார் இல்ல அவர் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா நம்மால் எதை ஈசியா ஜெயிக்க முடியுமோ அதை ஜெயிப்பது வெற்றியில்ல நண்பா. நம்மால் எது ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க முயற்சி பண்றோம் இல்ல, அதுதான். உன்னிப்பாக கவனிக்கணும், முயற்சி பண்றோம் இல்ல, அதுதான் உண்மையான வெற்றி. உங்களுடைய குறிக்கோள்; உங்களுடைய லட்சியம்; எல்லாம் பெருசா யோசிங்க, பெருசா கனவு காணுங்க, பெருசா திங்க் பண்ணுங்க, யாரும் அதெல்லாம் யாரும் தவறு'னு சொல்ல முடியாது.
பாரதியார் சொன்னது தான் 'பெரிதிலும் பெரிது கேள்' அப்படி இருக்க வேண்டும் உங்கள் கனவுகள்; அப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசைகள்; அப்படி இருக்க வேண்டும், உங்கள் உழைப்பு. அப்படி நீங்கள் பயணித்தால் இலக்கை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு நண்பா. ஆசைகள் இருக்கும்; கனவுகள் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது. வீட்ல ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பாவோட சட்டையை எடுத்து போட்டுக்குவான். அவரோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளனு இருக்கும். வாட்ச் கையிலே நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா இல்லையா? அந்த தகுதி எல்லாம் தெரியவே தெரியாது. அப்பா மாதிரி ஆக வேண்டும் என்று கனவு. இதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணு நண்பா.
தயவு செஞ்சு சொல்றேன் சினிமாவை சினிமாவா பாருங்க. உலகம் முழுவதும் பார்த்தால், சினிமா மக்கள் பார்க்கின்ற பொழுதுபோக்கு அம்சம். அதில் வருகின்ற டயலாக், சீன்ஸ் எல்லாமே முழுக்க முழுக்க ஒரு கற்பனை. முழுக்க முழுக்க ஒரு செயற்கை தனமானது என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். அப்படி ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காட்டுவதற்கு நீங்கள் என்ன பண்ணுவீங்க. அதற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள், அதற்கு தகுந்த மாதிரி சில வசனங்களை வைப்பது ஸ்கிரீன் பிளேயில் ஒரு காமனான விஷயம். அப்படி ஒரு சில கேரக்டர்கள் மூலம் சொல்லப்படுகின்ற சில தவறான எண்ணங்கள், ஆக்சன்... நான் உங்களுக்கு சொல்லி புரிய வைத்து அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு டெஃபனட்டா தெரியும் நீங்கள் யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டீங்க என்று. நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு அன்மெச்சூரா என்ன. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. மற்றதை விட்டுருங்க. திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்'' என்றார்.