Skip to main content

எது திராவிட மாடல்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! தொண்டர்கள் உற்சாகம்!!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Which is the Dravidian model? Chief Minister MK Stalin's explanation! Volunteers are excited !!

 

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி, மாநிலம் முழுவதும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. 

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில், அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. இக்கூட்டத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 

அவர் பேசியதாவது, "கரோனா தொற்று தீவிரம் தணிந்து விட்டதால் பொதுக்கூட்டம் நடத்துவதைத் தொடங்கி இருக்கிறோம். தலைமைக் கழகம் அறிவிக்கின்ற கூட்டங்கள் மட்டுமின்றி, தெருமுனை கூட்டங்கள், பாசறை கூட்டங்கள் போன்ற சிறு சிறு கூட்டங்கள் மூலம் மக்கள் மனதில் அரசின் சாதனைகளை பதிய வைக்க வேண்டும்.  

 

தி.மு.க. தொடங்கி, 70 ஆண்டுகளைக் கடந்து அதே எழுச்சியோடு உணர்ச்சியோடு இருக்கிறது என்றால், ஆளுங்கட்சியாக இருக்கும்போது செய்த சாதனைகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்த போராட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. நம்முடைய சாதனைகளை மறைக்க முடியாது. போராட்டங்களை மறக்க முடியாது. தி.மு.க.தான் தமிழ்நாட்டின் விடியலுக்கும், தமிழ் மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பு. தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிவதற்கு காரணம், நம்முடைய கொள்கை பரப்புரைகள்தான்.

 

எத்தனை நச்சு சக்திகள் முளைத்து, கழகத்திற்கு எதிரான விஷம பிரச்சாரம் செய்தாலும் கழகம் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக இருக்கக் காரணம், நம்முடைய பிரச்சாரங்கள்தான். அதற்குக் காரணம் நீங்கள்தான். இத்தகைய பரப்புரை பணிகளை நாம் எப்போதும் விட்டுவிடக்கூடாது. மக்களிடம் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள். உங்களின் பரப்புரைதான் கட்சியை வலுப்படுத்தும்.  

 

இது எனது அரசு என்று எப்போதும் சொன்னதில்லை. இது நமது அரசு. இந்த ஆட்சியை நான் மட்டும் நடத்தவில்லை. நாம் அனைவரும் சேர்ந்துதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுகிறோம். திராவிட மாடல் என்றால் என்ன? என்று சிலர் கேட்கிறார்கள். சமத்துவமும் சமூகநீதியும் என்னவென்று கூட சிந்திக்கத் தெரியாதவர்களிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. 

 

இல்லாத போலி பிம்பங்களை கட்டமைக்கத் தெரிந்த அவர்களுக்கு, இருப்பதை கண் திறந்து பார்க்க மனசு இல்லை. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் என இந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் வளர்ப்பாக இருக்கக்கூடிய நமக்கு, திராவிட மாடலை வளர்க்கும் கடமை இருக்கிறது. மானுட சமுதாயத்தை மேம்படுத்தக்கூடிய முற்போக்குக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கக்கூடிய திமுக தொண்டர்கள், திராவிட மாடலை எட்டுத் திசைக்கும் விளக்கிச் சொல்லுங்கள். 

Which is the Dravidian model? Chief Minister MK Stalin's explanation! Volunteers are excited !!

நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த ஆட்சியின் இலக்கணமாக திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் அடங்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயரால், இடத்தின் பெயரால், மொழியின் பெயரால் வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று திராவிடம் என்றால் ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது. 

 

அத்தகைய அரசியல் தத்துவத்தை எத்தனையோ பெரிய மேதைகள் சேர்ந்து நமக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பண்டிதர் அயோத்திதாசரும், பெரியாரும் நமக்கு திராவிடயியல் கோட்பாட்டை உருவாக்கித் தந்தார்கள். சர். பிட்டி. தியாகராயரும், டி.எம்.நாயரும், டாக்டர் நடேசனாரும் உருவாக்கிய சமத்துவம்தான் சமூகநீதி தத்துவம். 

 

சாதியை ஒழித்தல், சமூக விடுதலை குறித்து பாரதிதாசனும் நமக்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார். மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரும் நமக்கான பெண் விடுதலைச் சிந்தனைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனமான உணர்வைப் பெறவும், மாநில உரிமைகளுக்காக வாதிடவும் அண்ணாவும், பேராசிரியரும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். ஒரு நவீன தமிழகம் எந்தெந்த வகையில் எல்லாம் இருக்க வேண்டும் என்பதை கலைஞர் நமக்குக் காட்டியிருக்கிறார்.  

 

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம்தான் தி.மு.க. அத்தகைய இயக்கம் நடத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒன்று சேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய ஆட்சி. 

 

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்பு அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயற்கை வளம் இருக்கு. சீரான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கு. மனித வளம் இருக்கு. சமூக பொறுப்புணர்வு இருக்கு. உலகறிந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வர நினைக்கிறோம். நம்மால் வளர முடியும். நம்மை வளர்க்க திராவிட மாடலால் மட்டும்தான் முடியும். 

 

திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது; சீர் செய்யும். யாரையும் பிரிக்காது; அனைவரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் தாழ்த்தாது; அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது; தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அத்தகைய அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது. மிகப்பெரிய தொழில்நிறுவனங்கள் உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டினாலும்,  ஓர் ஏழை எளிய நரிக்குறவ பெண்ணின் கோரிக்கையையும் காது கொடுத்துக் கேட்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு என்பதை மறந்து விடக்கூடாது. 

கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் அதே நேரத்தில் இருளர் இன மக்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் மனம் குளிரும்படி திட்டங்களை தீட்டுவதுதான் இந்த அரசு. இந்த திராவிட மாடல் தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது என்பதை கழக செயல்வீரர்கள் நாட்டு மக்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லுங்கள். இது ஒரு கட்சியின் அரசு அல்ல. ஓர் இனத்தின் அரசு என்பதை சொல்லுங்கள். 

 

ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல. இனி தமிழ்நாட்டை தி.மு.க. மட்டுமே ஆளுமேயானால், தமிழ்நாடு என்பது உலகளவில் சிறந்த மாநிலமாக மாறும் என்பதை சொல்லுங்கள். நிதிநிலை மட்டும் இன்னும் சீராக இருக்குமானால் இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி இருக்க முடியும். ஆனால் படிப்படியாக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அண்ணா மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்... உறுதியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். 

 

நான் கொடுத்த வாக்குறுதியை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். இந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோம் என்று சொன்னால், இத்தகைய நிதிநெருக்கடியை பொறுத்துக் கொண்டுதான் செய்திருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கலைஞர் என்னைப் பற்றிச் சொன்னார். அந்த வகையில் இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். 

 

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தி.மு.க. பெயர், கருப்பு சிவப்பு கொடி, உதயசூரியன் சின்னம் ஆகிய ஆறும் தமிழ்நாட்டின் மக்களின் இதயத்திலே சிந்தனையிலே செயலிலே ஆறாக ஓட வேண்டும் என்று ஆத்தூரிலே உறுதி ஏற்போம். அதுவே தமிழ்நாட்டை வளப்படுத்தும் நலப்படுத்தும்." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

திராவிட மாடல் குறித்து முதல்வர் பேசும்போது, அதை வரவேற்கும் விதமா தொண்டர்கள் விசில் அடித்தும், கரவொலி எழுப்பியும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.