
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 'எங்கு போனாலும் பணம் கேட்கிறார்கள்; புள்ளைங்கள படிக்க வைக்க முடியல' என அழுது ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் காரின் முன் அமர்ந்து ஆவேசத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார் அப்பெண்ணை அகற்ற முயன்ற நிலையில் அழுது கதறிய அந்த பெண் கத்திக் கூச்சலிட்டார். அதனால் போலீசாரே என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகி நின்றனர். அதன் பிறகு தலையில் அடித்துக் கொண்டு அழுத அந்த பெண்ணை அழைத்துச் சென்று குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்றினர்.
தொடர்ந்து பேசிய அந்த பெண்மணி, ''புன்னம்சத்திரம் பெரியரங்கம்பாளையத்தில் இருந்து வரேன். மூணு வருஷத்துக்கு சேர்த்து என்னோட பெரிய பையனுக்கு கல்வி உதவி தொகை 60 ஆயிரம் வந்திருக்கிறது அம்மா நேர்ல வாங்க பேசிக்கலாம் என்று சொன்னார்கள். நேரில் வந்து கேட்டால் அந்த மாதிரி ஒரு திட்டமே இல்லை என்று சாதிக்கிறார்கள். என்னுடைய கணவர் இறந்துவிட்டார். நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டோம். ஆதரவற்ற விதவை சர்டிபிகேட் இருந்தால் ஆயாம்மா வேலை போட்டு தருவேன் என்றார்கள். அதையும் போட்டுக் கொடுக்கவில்லை. பொறம்போக்கு நிலம் தருகிறேன் என்றார்கள். அதையும் கொடுக்கவில்லை.
எனக்கு மருத்துவ பிரச்சனைகள் இருக்கு. நான் நாலு ஆபரேஷன் பண்ணி இருக்கேன். என் பிள்ளைங்க அரசு பள்ளியில் படிக்குது. எங்களுக்கு ஒண்ணுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. என்னுடைய பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை இருக்கிறது. ஆனால் வசதி இல்லை. எதுவுமே இல்லை என்கிட்ட. எங்க போனாலும் பணம் கேட்கிறார்கள். நான் எங்கே தான் போகட்டும். சாப்பாட்டுக்கே ரேஷன் அரிசி தான் வாங்கி சாப்பிடுறேன். நீங்க எல்லாரும் வந்து ஊர்ப்பக்கம் விசாரிச்சு பாருங்க. எங்க ஊர்க்கார அண்ணா ஒருத்தர்தான், வாம்மா புதுசா நல்ல கலெக்டர் வந்து இருக்காரு. ஒரு தடவை பெட்டிஷன் கொடுத்துட்டு பாக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தார். இல்லைன்னா நான் வந்து இருக்க மாட்டேன்'' என அழுது புலம்பினார்.