காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். 'கர்நாடக அரசிடம் இருந்து நீரை பெற்றுத்தராத மத்திய அரசையும், வேடிக்கை பார்க்கும் மாநில அரசையும் கண்டிக்கிறேன்' என கோஷமிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் பி.ஆர்.பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியனும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகியும் தொடர்ந்து குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.