சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி எதிர்க்கட்சியினரின் தொகுதியிலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் தொகுதி என நான் வேறுபாடு பார்ப்பது இல்லை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறந்து விளங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவசமாக கல்வி தரப்படுகிறது. அந்த வகையில் கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம்.
சாதி கல்விக்கு தடையாக இருக்க கூடாது. கல்வி தான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத சொத்து ஆகும். கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா ராஜன், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.