மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதில் 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அனுமதியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI - ஆர்.டி.ஐ) எய்ம்ஸ் நிர்வாகத்திற்குக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அலுவலரும், சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரும் அளித்துள்ள பதிலில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவுற்று வருகின்ற 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். முதற்கட்டமாக ரூ.1118.35 கோடிக்குக் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.