சிதம்பரம் மின்நகர் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம். இவர் கடந்தாண்டு கரோனா பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இவரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் செல்லும் வீல் சேர் வண்டி 'கிரிச்... கிரிச்...' என்ற சத்தத்துடன் இயங்கியது. கால் வைக்கும் கம்பி உடைந்த நிலையிலிருந்ததால் காலை தொங்க விட்டவாறு வீல் சேரில் அமர்ந்திருந்த இவரை அழைத்துச் சென்று வார்டில் அனுமதித்துள்ளனர். வார்டுக்கு சென்ற சண்முகசுந்தரம் வீல் சேர் வண்டி, ஸ்டெக்சர்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து பணியிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியரிடம் கேட்டுள்ளார்
இதற்கு ஊழியர்கள் மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட வீல் சேர், படுக்கை நிலையில் நோயாளிகளை அழைத்துச்செல்லும் (ஸ்டெக்சர்) பழுது ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும். மீதமுள்ள சிறு சிறு பழுதுடன் இருக்கும் வீல் சேர்களை வைத்துத் தான் இந்தக் கரோனாவை சமாளித்து வருவதாக மிகவும் வருத்தமாகக் கூறியுள்ளனர். பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுகள் 10 மற்றும் 11-ல் சுவர்கள் சரி இல்லாமல் இருந்ததைக் கண்டு மனம் வருந்தி தினந்தோறும் பல ஆயிரம் ஏழை மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனை இப்படியா இருக்கும் என நினைத்து அப்போதே அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் சென்ற அவர் மருத்துவமனையில் வீல்சேர் பழுதுகளை நினைத்து மன உளைச்சலாகவே இருந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவர்களிடம் பழுது நிலையில் உள்ள அனைத்து வீல் சேர் மற்றும் ஸ்டெக்ஸரை பழுதுநீக்க அனுமதி பெற்று பழுதான நிலையிலிருந்த வீல்சேர் 28 மற்றும் ஸ்டெக்சர் 8 ஆகியவற்றை ஒரு லாரியில் ஏற்றி அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சரிசெய்ய கோயம்புத்தூரிலிருந்து ஆட்களை வர வழைத்து நவீன முறையில் ரூ 1 லட்சத்து 25 ஆயிரத்தில் சரி செய்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த வார்டு 10 மற்றும் 11-ல் சுவர்களுக்கு ரூ 50 ஆயிரத்தில் வண்ணம் தீட்டி வார்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனை மருத்துவமனையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் அவர் குடும்பத்துடன் கலந்துகொண்டு பழுது நீக்கிய வீல்சேர், ஸ்டெக்சர்களை மருத்துவமனை முதல்வர் சண்முகத்திடம் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நிர்மலா, துணைக் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, தலைமை மருத்துவ அலுவலர் பாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து சண்முகசுந்தரம் கூறுகையில், ''மருத்துவமனையில் தங்கியிருந்தபோது வீல்சேர் சம்பவம் மனதை உறுத்தியது. பல ஆயிரம் ஏழை மக்களுக்கு பயன்படும் இந்த வண்டிகளை எவ்வளவு செலவு ஆனாலும் சரிசெய்ய வேண்டும் என்று சரிசெய்து வழங்கியுள்ளேன். இதைச் செய்ததால் மனஉளைச்சல் தற்போது சரியாகியுள்ளது. மருத்துவமனைக்குத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்ய தயாராக உள்ளேன்'' என்று கூறினார்.
சமூக ஆர்வலர் சண்முகசுந்தரத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.