தமிழகத்தில் நெல் அதிகம் விளையும் மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆனால், நெல்லுக்கான உரிய விலை இங்கு கிடைப்பதில்லை. இந்தியாவில் நெல் கொள்முதல் குறைவாகவும், கோதுமை கொள்முதல் அதிகமாகவும் அரசாங்கம் செய்கிறது. இதனால் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். வெளிமார்க்கெட்டில் 800 ரூபாய் தான் நெல்லுக்கு தருகிறார்கள்.
இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும். அப்படித் திறந்தால்தான் சரியான விலை கிடைக்கும். எனவே ஆண்டு முழுவதும் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என, திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி கோரிக்கைவிடுத்து பேசினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “நெல் அதிகம் விளையும் மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. உறுப்பினர்கள், இன்னும் எந்தெந்த இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும் எனச் சொன்னால் அந்த இடங்களில் அமைக்கப்படும்” என்றார்.
சட்டமன்றம் முடிந்து ஊருக்கு வந்துள்ள முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி எம்.எல்.ஏ., தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு, அந்தப் பட்டியலை அதிகாரிகள் மூலம் அரசுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.