நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில் ‘இதற்கெதற்கு சிறப்பு கூட்டத்தொடர்’என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 5 அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அமர்வின் போது விவாதிக்கப்படும் விவாதப்பொருள் குறித்த அட்டவணையில் கவர்மெண்ட் பிஸ்னஸ் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் விவாதப்பொருளாக ‘கவர்மெண்ட் பிஸ்னஸ்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மோடி கவர்மெண்டின் பிரதான பிஸ்னஸ் பொதுத் துறைகளை விற்பதும், அதானியை வளப்படுத்துவதும். இடையிடையே நேருவை பழிப்பதுமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.