Skip to main content

தமிழக அரசை தடுக்கும் சக்தி எது?-பாமக அன்புமணி கேள்வி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
What is the power to stop the Tamil Nadu government?- Pamaka Anbumani question

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை வரவேற்றுள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் என்ற புதிய வட்டத்தை தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது. நிர்வாக வசதிக்காக இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 5க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட திருவோணம் ஒன்றியத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின்  தலைமை இடத்திற்கு சென்று வருவது மிகவும் கடினமானதாக உள்ளது. அதனால், ஒரத்தநாடு வட்டம், பட்டுக்கோட்டை வட்டம் ஆகியவற்றில் உள்ள 45 வருவாய் கிராமங்களை இணைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படுவதற்கான அரசாணை  தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசின் சேவைகள் பொதுமக்களுக்குத் தடையின்றி கிடைக்க வேண்டும், வருவாய் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் மாவட்டத்திலும், வட்டத்திலும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர வேண்டும் என்பது தான் புதிய மாவட்டங்களையும், புதிய வட்டங்களையும் உருவாக்குவதற்கான அடிப்படை ஆகும். அந்த அடிப்படையில் திருவோணம் வட்டமும், வேறு சில வட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய மாவட்டங்கள் எதுவும் உருவாக்கப்படாதது ஏன்? என்பது தான் பாமகவின் வினா.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டமும், கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலம் மாவட்டமும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து பழனி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

What is the power to stop the Tamil Nadu government?- Pamaka Anbumani question

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே  ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. திருவோணம் வட்டம் உருவாக்குவதற்காக தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் இந்த புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும் பொருந்தும். தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லையை சென்றடைய 100 கி.மீக்கும் கூடுதலாக பயணிக்க வேண்டியிருக்கும். அதேபோல், கடலூர் மாவட்டத்தின் இரு எல்லைகளுக்கு இடையிலான தொலைவு 130 கி.மீக்கும் அதிகம் ஆகும். ஒரு எல்லையில் உள்ள மக்கள் இன்னொரு எல்லையில் உள்ள மாவட்டத் தலைநகரத்திற்கு சென்று தமிழக அரசின் சேவைகளைப் பெறுவதற்காக 100 கி.மீக்கும் கூடுதலான தொலைவு பயணிப்பதில் உள்ள சிக்கல்கள் முதல்வருக்கு தெரிந்திருக்கும்.

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் மிகப்பெரிய மாவட்டம்  திருவள்ளூர். அதன் இப்போதைய மக்கள் தொகை 41 லட்சம்.  இது தனிநாடாக இருந்தால் உலகில் 130-ஆம் பெரிய நாடாக இருந்திருக்கும். இரண்டாவது பெரிய மாவட்டம் சேலம் ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அதன் மக்கள் தொகை 34.82 லட்சம். அடுத்து கோவை மாவட்டத்தின் மக்கள்தொகை 34.58 லட்சம். இப்போது இந்த இரு மாவட்டங்களின் மக்கள்தொகை 38 லட்சத்தைக் கடந்திருக்கும். மக்கள்தொகை  அடிப்படையில் பார்த்தால் இந்த இரு மாவட்டங்களும் உலகில் 133, 134 ஆவது பெரிய நாடுகளாக இருந்திருக்கும்.

இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். தமிழகத்தில் பல சட்டப்பேரவைத் தொகுதிகள் இரு மாவட்டங்களில் பிரிந்து கிடப்பதாலும் பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தையும் சரி செய்ய மாவட்ட சீரமைப்பு தான் ஒரே தீர்வு ஆகும். அண்டை மாநிலங்களான ஆந்திரத்திலும், தெலுங்கானாவிலும் அனைத்து மாவட்டங்களும் பிரிக்கப்பட்டிருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை யோசனை தெரிவித்தது. ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவில்லை.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். புதிய மாவட்டங்களை உருவாக்க அதிக செலவு ஆகாது. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின்  பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்