கோவில்களின் அழகு மற்றும் சிலைகள், பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்கள் உள்ளன. அவை, தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டிடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக உள்ளன. அக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார்போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாடு அரசு 2022-23 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தற்போது ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலை ஆய்வு செய்துவிட்டு, திருக்கோவில் திருமுக்குளம் சீரமைப்பு பணிகள், திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துதல், மற்றும் கோவில் நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், கோவில் நிர்வாகிகள், மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருக்கோயில்களை மேம்படுத்தவும், பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து தருவதற்கும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு, திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை மானிய கோரிக்கையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, திருக்கோவில்களின் தேவைகளையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள சக்தீஸ்வரன் திருக்கோவிலில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டதோடு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வீர வசந்த ராயர் மண்டபத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள வசந்த மண்டபமும் ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஜீயருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்து, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும், நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 12 அம்மன் திருக்கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி, குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் நடைபெறவுள்ள 108 திருவிளக்கு பூஜை தொடங்கி வைக்கப்படவுள்ளது.” என்றார்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறார் தமிழ்மூதாட்டி ஔவையார். கோவில் என்பது பண்டைய காலத்தில் ஒரு பண்பாட்டு மையமாகவே திகழ்ந்திருக்கிறது. கலை, இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை எனக் கலையோடு தொடர்புடையதாகவும் கோவில்கள் உள்ளன. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் சொன்னதற்குப் பின்னால், விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற வாழ்வியலும் உண்டு.
தமிழக அரசு மேற்கொள்ளும் கோவில் புனரமைப்பு பணிகள் மூலம் பக்தர்கள் மனம் குளிர்வதோடு, நாட்டுக்கும் நல்லது நடக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக உள்ளது.