தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம்பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவியதற்கான அறிகுறிகளை எளிய முறையில் கண்டறிந்து அதை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அதன் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தீவிர அறிகுறிகள்.
இதில் டெங்கு நோய்த் தொற்றின் முதன்மை அறிகுறிகளில் காய்ச்சல் ஒன்றாகும். இது பொதுவாகத் திடீரென்று தோன்றும் மற்றும் பல நாள்களுக்கு நீடிக்கலாம். இதில் ஆரம்ப அறிகுறியானது, உடல் சோர்வு அதிகமாகக் காணப்படும். மேலும், படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் வலி இருக்கும். தலைவலி கூடுதலாக இருக்கும். கண்களில் அதிக வலி இருக்கும். அத்துடன் கால்கள் மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும். இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகளாகும்.
அதே தீவிர அறிகுறி என்றால், பல் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக அளவுக்கு உடல் அசதி மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் உதிரப்போக்கு அதிகரிக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கக் கூடிய நிலவேம்பு கசாயத்தை அருந்தலாம்.
மேலும், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களைத் தடுப்பதற்கு நமது வீட்டில் உள்ள தேவையற்ற நீர் தேங்கும் தொட்டி அல்லது பாத்திரங்களை அகற்றிவிட வேண்டும். ஏனென்றால், நீர் தேங்கும் இடத்தில் கொசு தனது இனப்பெருக்கத்தை அதிகரித்து டெங்கு காய்ச்சலை உண்டாக்கும். மேலும், வீட்டில் உள்ள தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களைக் கொசு அண்டாத அளவுக்கு மூடி வைக்க வேண்டும். ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அடிக்கடி வெளியேற்ற வேண்டும். இது மாதிரி ஆரம்பக் கட்டத்திலேயே கொசுக்கள் பரவாமல் பல வழிமுறைகளைச் செய்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.