
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்குகளில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில் தற்பொழுது காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 23,126 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 9,965 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,865 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 237 வாக்குகளும் பெற்றுள்ளனர். இரண்டு சுற்றுகள் முடிந்து மூன்றாம் சுற்றின் தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது மூன்றாம் சுற்று எண்ணிக்கை தொடங்கியது.
தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆய்வு செய்து வருகிறார். அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளதால் தொண்டர்கள் தொடர்ந்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.