கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை வந்தடையும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் பகுதியில் விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பலரின் நிலங்களைச் சாலைக்காக கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (16.02.2021) சென்னை வந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார். 'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள் 'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள், இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான் இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே சாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும் முயற்சி' என்றனர்.