தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். மாணவர்கள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் காட்டி அரசுப்பள்ளிகள் எதையும் மூடக்கூடாது. மூடப்பட்ட பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும். மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை-2019-ஐ திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கூறியது:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக்கொள்கை 2019-ல் மாணவர்களுக்கு பாதகமான பல சரத்துக்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில மக்களின் உரிமையை அது வெகுவாகப் பாதிக்கிறது. மாணவர்கள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கிறது. 3 வயதிலேயே முறையான கல்வி தொடங்குவதாகக் கூறுகிறது. 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை வலியுறுத்துகிறது. 8 வயதில், 10 வயதில் பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் மத்தியில் கடும் மன அழுத்தத்தை உண்டாக்கும். கல்வியில் முன்னேறிய எந்த நாட்டிலும் இதுபோன்று இல்லை. இது ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நடவடிக்கையாக உள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கம், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் உள்ளது. எனவே, மாணவர்களுக்கு கல்வி எந்த வகையிலும் பாதிக்காத வகையில் முதல் பருவ விடுமுறை தினத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலம் முழுவதும் மேற்கண்ட பிரச்சார இயக்கத்தை கடந்த 25-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறோம். தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து நடைபெற்று வரும் இந்தப் பிரச்சார இயக்கம் வருகின்ற 29-ஆம் தேதி கரூரில் நிறைவடைகிறது. குரூரில் மிகச்சிறந்த கல்வியாளர்களை அழைத்து பிரமாணடமான பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.