Skip to main content

தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டப்படும் மரங்கள்! நீதிபதிகள் கண்டிப்பு

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
hc


தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழிச்சாலைக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் ஒரு மரம் வெட்டினால், 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.  ஆனால் இதை தேசிய நெடுஞ்சாலை முறையாக பின்பற்ற வில்லை. நாங்களே நேரில் பார்த்து இருக்கிறோம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரம் உள்ள மரங்களை வெட்ட இடைகால தடைவிதிக்க கோரிய வழக்கில் சாலை விரிவாக்கத்திற்காக,  ஒப்பத்த படி குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் வெட்டுவோம் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த தமிழரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்  " NH 785 மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.   இந்த சாலையின் இருபுறமும் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்படும். இந்த சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.   இதில் ஒரு பகுதியாக மதுரை  பாண்டியன் ஹோட்டலில் இருந்து புதிய மேம்பாலம் அமைக்கபட உள்ளது.  இதற்காக மதுரை - நத்தம் சாலையில் 50 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையான மரங்கள் வெட்டபடுகிறது.    மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை. எனவே இந்த சாலையில் விரிவாக்க பணிகள் தேவையற்றது. சாலை விரிவாக்க பணியால் பழங்கள் தரகூடிய மரங்கள், மருத்துவ குணம் நிறைந்த மரங்கள் தினசரி வெட்டி சாய்க்கப்படுகிறது. 

 

100 ஆண்டுகள் பழமையான மரங்கள் இப்பகுதியில் இருப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் உள்ளது.  மரங்களை வெட்டுவதால் சுற்றுசூழல் கடுமையான பாதிக்கபடும். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பலஇடங்களில் சாலை விரிவாக்க பணிகளின் போது மரங்களை வெட்டாமல் பாதிக்கபடும் மரங்களை மாற்று இடங்களில் நட்டு வைத்துள்ளனர்.  இதனால் மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது. வேறு இடத்தில் நடபட்ட மரங்கள் மீண்டும் இயற்கையாக வளர தொடங்குகின்றன. மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்ய பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் மரங்களை வெட்டி வருவதால் சுற்றுசூழல் பாதிப்படையும்.  எனவே மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைகால தடைவிதிக்க வேண்டும். மேலும் மரங்களை வெட்டாமல் மாற்று இடங்களில் வைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை செயலர், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.


இந்த வழக்கு இன்று விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள்  சுந்தர்,  முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் மரங்களை வெட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரினர். மேலும் விரிவாக்கம் என்ற பெயரில், அனைத்து மரங்களையும் வெட்டுகின்றனர் என கூறினர்.

 

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள்,  தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழிச்சாலைக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இதை தேசிய நெடுஞ்சாலை முறையாக பின்பற்ற வில்லை . நாங்களே நேரில் பார்த்து இருக்கிறோம் என கூறிய நீதிபதிகள்,  சாலை விரிவாக்கத்திற்காக,  ஒப்பந்த படி குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் வெட்டுவோம் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்