
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘தமிழகம் மீட்போம்’ உரைக்கு பதிலடியாக ‘நீங்க என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அனல் கக்க.. விருதுநகர் மாவட்டச் செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும், ‘அரண்மனை நாயே.. அடக்கடா வாயை..’ என்று சினிமாவில் கலைஞர் எழுதிய வசனத்தைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பாலாஜியை எச்சரித்துள்ளனர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும், விருதுநகரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “மு.க.ஸ்டாலினை தரமற்றுப் பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என்று நினைத்து ராஜேந்திரபாலாஜி ஒருமையில் பேசியிருக்கிறார். ஜெயலலிதா இருக்கும்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயலலிதா காலை மட்டுமல்ல; அவருடைய கார் டயரையும் நக்கிப் பிழைத்தார்கள்.
இப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் காலை நக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த மூலை முடுக்கிலும் சென்று ஸ்டாலின் மக்களைச் சந்திப்பார். துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திரபாலாஜி செல்ல முடியுமா? காமராஜருக்கு இறுதி மரியாதை செய்தவர் கலைஞர். சங்கரலிங்கனார் கனவை நனவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. தரம்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அவரால் இந்த மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது.” என்றார்.
வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு - “எங்க தளபதி பற்றி மிக மோசமான ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். நாங்களும் ஒரு மந்திரிங்கிற அளவுல ஒரு மரியாதையா பேசலாம்னு பார்த்தோம். அவரோ, இன்றைக்கு ரொம்ப கேவலமா பேசக்கூடிய இடத்துக்குப் போய்விட்டார். அவர் உபயோகப்படுத்திய வார்த்தைகளைவிட கீழான வார்த்தைகளில் எங்களாலும் பேசமுடியும். ஆனால், திமுகவிற்கு என்று ஒரு தரம் இருக்கின்ற காரணத்தால், எங்களுடைய உணர்வுகளை நாங்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவர் நாவை அடக்கிப் பேச வேண்டும். கலைஞர் ஒரு வசனம் எழுதினார். ‘அரண்மனை நாயே.. அடக்குடா வாயை..’ என்று. அதனால்தான், கூறுகிறோம். உங்கள் நாக்குகளை அடக்குங்கள் என்று சொல்கிறோம். மந்திரியாக இருந்துவிட்டால் என்ன? இன்னைக்கு நீங்க மந்திரி. நாளைக்கு ஊருக்குள் வந்து நீங்க நடமாடனும்ல. வாயில வந்ததையெல்லாம் பேசிட்டு போயிடலாம்னா.. எல்லாரும் கேட்டுட்டு இருப்பாங்களா?

உங்ககிட்ட இருக்கிற எம்.எல்.ஏ உயிருக்குப் பயந்துகிட்டு இருக்காருன்னு சொல்லுறாங்க. தேவர் சமாதியில போயி விபூதியைத் தட்டிவிட்டோம் என்று.. என்னமோ தேவர்களுக்கெல்லாம் நீங்கதான் அடைக்கலமா இருக்கிறோம், நீங்கதான் பெரிய மனுஷன இருக்கிறோம்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. அதே தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த உங்க கட்சி எம்.எல்.ஏ.க்கே கொலை மிரட்டல் விடறீங்களே. சிவகாசி தொகுதியில் இருக்கக்கூடிய அந்த ஏரியாவுக்கு உங்களால் போகமுடியுமா?
சிவகாசி தொகுதியில் நின்னு இன்னைக்கு எம்.எல்.ஏ ஆக முடியாம.. வெவ்வேறு தொகுதியில போய் நின்னு.. ஒவ்வொரு ஊரா ஓடிட்டு இருக்கீங்க. எங்களைப் பார்த்துச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதியிருக்கு? தலைவர் ஒவ்வொரு இடத்திலும் நீங்க செஞ்சிருக்கிற ஊழலைப் பட்டியலிட்டு சொன்னாரு. உங்களுக்கு திராணி இருந்தால்.. நீங்க ஒரு சரியான ஆண்மகனாக இருந்தால்.. உங்களிடம் உண்மை இருந்தால்.. நீங்க வழக்கு போட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தைச் சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை.
அதை விட்டுவிட்டு, மிகக் கேவலமாக ஒரு மண்ணுன்னு சொல்லக்கூடிய அளவுக்குக்கூட இல்லாமல்.. அண்ணன் சொன்னது போல.. கால் நக்கி பிழைத்துக் கொண்டிருக்கிற நீங்க.. தலைவர் கலைஞருடைய மகனைப் பார்த்துச் சொல்வதற்கு.. அல்லது தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க தோழர்கள் உங்கள் நாவை அடக்குவார்கள். இந்த விருதுநகர் மாவட்டத்தில் நீங்க எங்கே வந்தாலும் திமுகவோட எதிர்ப்பைச் சந்தித்துத்தான் ஆகணும். இந்திரா காந்திக்கே கறுப்புக்கொடியைக் காட்டியது திமுக. ராஜேந்திர பாலாஜியெல்லாம் எந்த மூலைக்கு?” என்று கேட்டார்.
பதிலுக்குப் பதில் லாவணி பாடிக்கொண்டிருப்பதே அரசியல்!