உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.