திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்ட மன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள், மேயர், துணை மேயர், ஒன்றிய செயலாளர்கள், ஒட்டன்சத்திரம் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இக்கூட்டத்திற்குக் கிழக்கு மேற்கு மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்தோம். அது போல் இந்த தேர்தலிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறோம். அதுபோல் நிலக்கோட்ட தொகுதியில் 2019 இல் வாங்கியதை விட இந்த 2024 தேர்தலில் வாக்குகள் அதிகமாகவே வாங்கி இருக்கிறோம். அதுபோல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் ஒரு இலக்கை வைத்திருக்கிறார் அதை நாம் நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.
கடந்த 2019. 2021. 2024 இப்படித் தொடர்ந்து நடந்த தேர்தலில் நாம் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்தும். அதிலும் நமது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்திலேயே முதல் இடத்திலும் பிடித்தார். அந்த அளவுக்குத் திண்டுக்கல் மாவட்டத்தை திமுக கோட்டையாக தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். வரும் 17ஆம் தேதி சென்னையில் பவள விழா நடக்க இருக்கிறது. அதற்கு அனைவரும் அனைவரையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அது போல் முதல்வர் கொண்டு வந்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் தெரு பிரச்சாரம் மட்டும் தின்னப்பிரச்சாரங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி சரிவர ஒதுக்கவில்லை.
இருந்தாலும், இந்திய அளவில் மாபெரும் முதல்வராக நம் முதல்வர் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். அதுபோல் வரும் ஜனவரியில் 25 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு கூடிய விரைவில் வேலை வாய்ப்பு வர இருக்கிறது. எம்.பி. தேர்தலில் வெற்றிக்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளையும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற சபதத்தை ஏற்று இப்போது தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்” என்று கூறினார்.
இக்கூட்டத்திற்குக் கிழக்கு மேற்கு மாவட்டத்திலிருந்து 3000-க்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. கூட்டம் அதிகம் என்பதால் கிழக்கு மாவட்டச் செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், நேரடி கண்காணிப்பில் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான அளவுக்கு பிரியாணிகளையும் வைக்கச் சொல்லிச் சாப்பிட வைத்து பொறுமையாக ஊர்களுக்குப் போகும் மாறு அறிவுரைகளையும் வழங்கி அனுப்பி வைத்தார்.