இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விமான நிலைய பணிக்காக மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் மேலும் 147.11 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிக்கு வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக பரந்தூர் அருகே உள்ள வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களை தவிர்த்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது.
தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் ஜூன் 24ஆம் தேதி ஆந்திராவின் சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க திட்டம் உள்ளதாகவும், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் ஆந்திராவிற்கு இடம் பெயர இருப்பதாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியது எனவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் அடைய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ள போராட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன், ஆந்திர மாநிலத்தை நோக்கி ஜூன் 24இல் கண்ணீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பரந்தூர் மக்களின் இந்த முடிவு பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.