அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம் என பா.ஜ.கவின் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட நாளன்றே செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.கவின் முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடனோ, தி.மு.கவுடனோ கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி மட்டுமே என தெரிவித்திருந்தார்.
அதேபோல் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் நன்றி தெரிவிப்பதற்காக சந்தித்ததாக கூறியிருந்தார். அதேபோல் கூட்டணியில் உள்ள அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளரை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க துணை தலைவர் வி.பி. துரைசாமி, அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் கூட்டணிகள் மாற வாய்ப்புகள் குறைவு எனக் கூறியுள்ளார்.
அண்மையில் அ.தி.மு.கவின் கே.பி.முனுசாமி அ.தி.மு.க தலைமை நியமித்துள்ள முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணியில் இடம்பெறும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது பா.ஜ.க துணைத் தலைவர் இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.