பெருங்குடி குப்பை கிடங்கு அருகே உள்ள நிலை இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் மாறி இருந்த நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஐஐடி குழுவினர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அங்கு சயனோபாக்டீரியா அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள நீர்நிலை கடந்த மே மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே இளஞ்சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நீர்நிலை இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாறியதற்கான காரணம் குறித்து ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்விற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நீர் நிலையின் இந்த மாற்றத்திற்கு சயனோ பாக்டீரியா என்ற பாசியின் வளர்ச்சியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ 3 நாட்களாகப் போராடி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தீயணைப்பு கருவிகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் நீர்நிலைகள் கலந்ததால் அவை சயனோ பாக்டீரியா என்ற பாசிகள் வளர்ப்பை ஊக்குவித்ததால் நிறம் மாறியதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.