சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி இன்று (01/08/2021) மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். 137 நாட்களுக்கு தேவைப்படும் 9 டி.எம்.சி. தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. மழைக்காலங்களில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து தண்ணீர் தேவைப்படாது என்ற பட்சத்தில் தண்ணீர் திறக்கப்படுவதை நிறுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.
1955- ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு தற்போது 62- வது வருடமாக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதேபோல திருச்சிமாவட்டம், புள்ளம்பாடி வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி முக்கொம்பு மேலணை வாத்தலை கிராமத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தண்ணீர் திறந்து விட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.