சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் மழை காலங்களில் பெருநகர் சென்னை மாநகராட்சிகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் நீர்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரும் பணிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்திய தலைமைச் செயலாளர், கடந்த ஆண்டு நடைபெற்ற பணிகளில் எஞ்சிய பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். இந்த ஆண்டின் பருவமழை தொடங்குவதற்கு முன் ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.