சென்னை அஷோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.
சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சந்தித்து அவரிடம் நல்ல ஆலோசனைகள் பெறுவதற்காக வந்தோம். ஒரு மணிநேரம் அவரின் கடந்த கால அனுபவங்களை பெற்ற அதாவது எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை அவர் பெற்ற அனுபவங்களை ஆலோசனைகளாக அவர் வழங்கினார்” எனக் கூறினார்.
நீங்கள் நியமித்த ஒரு மணிநேரத்தில் பண்ருட்டியாரை கட்சியில் இருந்து எடப்பாடியார் நீக்கிவிட்டாரே என்ற கேள்விக்கு “அது அவரைத்தான் கேட்கவேண்டும்” என பதிலளித்தார்.
இந்த சந்திப்பு மற்றும் நீங்கள் அவருக்கு பதவி கொடுத்தது எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது எதிர் தரப்பின் கருத்தாக இருக்கிறது என்ற கேள்விக்கு “பொது மக்களின் கருத்தாக மக்கள் ரசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். விரும்பிக்கொண்டு இருக்கின்றார்கள். மூத்த அரசியல் தலைவர் நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தார்களோ, ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக வளர்த்தார்களோ அந்த நோக்கம் மற்றும் கொள்கைகளை பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழக மக்களிடம் சொல்லுகின்ற பொழுது அது தனித்துவம் பெறுகின்ற ஒரு வாய்ப்பாக இன்று இருக்கின்றது. பொறுத்திருந்து பாருங்கள் கடந்த காலங்களில் எம்ஜிஆருடன் இருந்தவர்கள் மற்றும் ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை உறுதியாக சந்தித்து அவர்களின் ஆசியை பெறுவோம்.