புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் நெடுவாசல் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளி வீராச்சாமி மகன் வீரப்பன் (45). இவர் தனது குடும்பத் தேவைக்காகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு தவணையில் செலுத்தும் வகையில் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். சில மாதங்களாகக் கூலி வேலை சரியாகக் கிடைக்காததால் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (04.09.2024) தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வினோத் (வயது 34) மற்றும் மதன்குமார் ஆகிய இருவரும் வீரப்பன் வீட்டிற்கு வந்து தவணை தொகையைக் கேட்டபோது கையில் பணமில்லை அடுத்த மாதம் சேர்த்துச் செலுத்துவதாகக் கூறியுள்ளார். இப்போதே பணத்தைக் கட்ட வேண்டும் என்று நிதி நிறுவன ஊழியர் வினோத் கூடுதலாகப் பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமான நிலையில் வீரப்பன் தான் வேலைக்குக் கொண்டு செல்லும் வாங்கரிவாளை எடுத்து வினோத்தை வெட்டியுள்ளார். இதில் வினோத்துக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த வினோத்தை உடனே அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரப்பனைக் கைது செய்துள்ளனர். இதே போல வடகாடு பகுதியில் கடன் வசூலுக்குச் சென்ற ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.