எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நேற்று (11.06.2021) நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடலூர் நகரத் தலைவர் P.T.J. வேலுசாமி தலைமையில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் குமார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மத்திய மாவட்டத் தலைவர் திலகர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து கண்டன உரையாற்றினார். விருத்தாச்சலத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில், மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், ஜங்ஷன் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் ஆகியவை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், “தினந்தோறும் உயர்த்தப்பட்டுவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துவருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கண்டிக்கத்தக்கது. எனவே அதிகரித்துவரும் டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் குறைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.