உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.