கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் பூராசாமி (70). இவர், ஆதரவற்ற நிலையில் ஒரு சிறு குடிசையில் வசித்து வந்துள்ளார். தொடர் மழையின் காரணமாக இவர் இருந்த வந்த வீடு இடிந்து விழுந்து, மழை நேரத்தில் தங்க இடமில்லாமல் தவித்து வந்துள்ளார்.
இவரது நிலையைக் கண்ட அந்த கிராமத்து தன்னார்வல இளைஞர்கள் ஒன்றிணைந்து 70 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் ஓடு கொண்டு கல் வீடு கட்டி, அதற்கு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளனர். மேலும், அந்த வீட்டை கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மூலம் திறந்து வைத்து, பூராசாமியிடம் ஒப்படைத்தனர். அவருக்கு தேவையான உடைகள், போர்வை, சேர், மளிகை சாமான்கள், காய்கறி உட்பட அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இளைஞர்களின் இத்தகைய மனிதாபிமானமிக்க செயலைக் கண்டு பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இரண்டு நாட்களில் அந்த வீட்டை அமைத்துக் கொடுத்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.