காதல் திருமணம் செய்துகொண்ட கண் தெரியாத பெண்ணை இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அடுத்துள்ளது அம்பள்ளி பில்லகொட்டாய் கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். 14 வருடங்களுக்கு முன்பு கலைச்செல்வி என்பவரை அன்பழகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடு கொண்ட ரூபினி என்பவருடன் அன்பழகன் முறையற்ற தொடர்பு வைத்திருந்துள்ளார். அதில் அப்பெண் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏமாற்றியதாக அன்பழகன் மீது ரூபினி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவரைப் பிடித்த போலீசார் அவரை எச்சரித்தனர். அப்பொழுது இரண்டாவதாக ரூபனியை அன்பழகன் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அவருடைய வீட்டுக்கு எதிரியே ஒரு சிறிய வீட்டில் அவரை தங்க வைத்த அன்பழகன் தொடர்ந்து வீட்டு வேலைகளை செய்ய வைத்துள்ளார். போலீசாரிடம் தன்னை மாட்டி விட்டதால் ஆத்திரமடைந்த அன்பழகன் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கணவனின் தொடர் சித்திரவதையால் ரூபினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரூபினியின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தோசைக் கல்லால் சூடு வைத்து பெண் பலியானதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அன்பழகனை பிடித்த உறவினர்கள் அவரை அடித்து துரத்தியுள்ளனர். மேலும் அவருடைய முதல் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தாரை ஒரு வீட்டிற்குள் பூட்டி சிறை வைத்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டதுடன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அன்பழகனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை ஆய்வில் ரூபினி கொலை செய்யப்பட்டது உறுதியானால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.