தமிழ்நாட்ல் தற்போது போதுமான தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாத நிலையில், தற்காலிகமாக தடுப்பூசி போடும் முகாம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், இன்று (30.06.2021) பொதுமக்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இன்று வெளிநாட்டிற்குப் பயணம் செய்யக்கூடிய பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான சிறப்பு முகாம் மிளகுப் பாறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள், வெளிநாட்டிற்குப் பயணிக்க உள்ள விசா, கடவுச்சீட்டு மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றைக்காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.