பட்ட காலிலேயே படும் என்ற பழமொழி இதற்கும் பொருந்தவே செய்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டம் - திருத்தங்கல்லில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்த போது, லஞ்சம் வாங்கி கைதானார் ஆம்ஸ்ட்ராங். 15 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு, ஜாமினில் விடுதலையாகி, தற்போது மேல ஆமத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
வழக்கில் சிக்கி சிறைவரை சென்றாகிவிட்டது. அதனால் பெயரும் கெட்டுவிட்டது. இனி திருந்தி செயல்பட்டால், நல்ல பெயர் எடுத்து விடவா முடியும்? என்ற அவநம்பிக்கையுடன், முன்பு போலவே, லஞ்சம் வாங்கியபடியே இருந்தார், அவர்.
இன்று பட்டா மாறுதலுக்கு ரூ.7000 லஞ்சம் வாங்கிய போது, மீண்டும் கையும் களவுமாகப் பிடிபட்டு கைதாகியிருக்கிறார், ஆம்ஸ்ட்ராங்.
இத்தனைக்கும் வசதியானவர் ஆம்ஸ்ட்ராங். அவருடைய மனைவி அரசுப் பள்ளி ஆசிரியர். குடும்பம் நடத்துவதற்கு பொருளாதார ரீதியாக எந்தக் குறையும் அவருக்கு இல்லை. ஆனாலும், லஞ்சம் வாங்கியே பழகிவிட்ட கைகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
லஞ்சம் வாங்காமல் இருக்கவே முடியாது என கொண்ட கொள்கையில் 'ஸ்ட்ராங்' ஆக இருக்கும் அரசுத்துறை ஊழியர்களுக்கு சரியான பாடமாக இருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.
கொஞ்சம் திருந்துங்க ஆபீசர்ஸ்..
- அதிதேஜா