உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையால், விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளை மூடி போராட்டமெல்லாம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, பேரியம் மற்றும் பொட்டாசியம் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாதவாறு பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான புதிய பார்முலா வரையறுக்கப்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தியில் விதிகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பது உரிமம் பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்குத்தான். இதே மாவட்டத்தில் மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி போன்ற பகுதிகளில், வீடுகளில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்கள், சட்ட விதிகளுக்கெல்லாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலையீட்டின் காரணமாக, இவர்கள் மீது எந்தத் துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், இந்தப் பகுதிகளில் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
சாத்தூர் – தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனியில் முனியசாமி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக, வழக்கம்போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். இன்று (8-5-2019) மாலை, தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ பற்றி அந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ள வீடுகள் மற்றும் தகர செட்டுகளுக்கும் மளமளவென தீ பரவியது.
தகவலறிந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி, தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில், மூன்று வீடுகள் மற்றும் தகர செட்டுகள் முழுவதுமாக எரிந்துபோயின. அதனால், கலைஞர் காலனியைச் சேர்ந்த தர்ஷினி, கார்த்திகை லட்சுமி, விஜய வர்ஷினி, குருவுத்தாய், குருவம்மாள் என 5 பேர் காயமடைந்து தாயில்பட்டியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கம்போல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனும், மற்ற போலீஸ் அதிகாரிகளும் வெடிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். இவ்வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
“வீடுகளில் கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பது அத்தனை அதிகாரிகளுக்கும் தெரியும். அபாயகரமான பட்டாசுத் தொழிலைக் குடிசைத் தொழில்போல வீட்டில் வைத்துச் செய்துகொண்டிருக்கும் இந்தப் பகுதி மக்களை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லை. ஏனென்றால், கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பவர்களை வாக்காளர்களாக மட்டுமே பார்க்கின்ற அரசியல்வாதிகள், நடவடிக்கை எடுக்க விடுவதில்லை.” என்கிறார்கள் சிவகாசி பட்டாசு உற்பத்தி யாளர்கள்.
இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேரில் குழந்தைகள் இருவர் என்பதுதான்!