தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றவர் மீது மது போதையில் இருந்தார் என வழக்கு பதிவு செய்திருக்கிறது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூர் காவல் நிலையம்.
விவகாரம் இதுதான் –
விருதுநகரை அடுத்துள்ள சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் திருநல்லமுருகன். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் (பேட்ஜ்) லைசன்ஸ் பெற விருதுநகர் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த உரிமம் கிடைப்பதற்கு ‘இவர் மீது கிரிமினல் வழக்கு எதுவும் இல்லை’ என்று அவர் வசிக்கும் லிமிட்டில் உள்ள ஆமத்தூர் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. அதற்காக, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆமத்தூர் காவல் நிலையத்துக்கு தொடர்ந்து போய் வந்திருக்கிறார். ஆட்சேபணை இல்லை சான்று தராமல், ஆமத்தூர் காவல் நிலையம் அவரை அலைக்கழித்துள்ளது.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்துவிட்ட நல்லமுருகன், அந்தக் காவல் நிலையத்தின் முன்பாக, தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர் கையிலிருந்த பெட்ரோல் கேனைப் பறித்துக் காப்பாற்றியிருக்கின்றனர். அதோடு அவரை விடவில்லை. ‘தற்கொலை செய்துகொள்வேன் என்று காவல்துறையை மிரட்டவா செய்கிறாய்?’ என்று நறநறத்தபடி, மதுபோதையில் இருந்ததாக திருநல்லமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது “யாரும் இங்கே தீக்குள்ளிக்க முயற்சிக்கவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை.” என்று ஒரே போடாகப் போட்டார்கள்.
‘அலைய வச்சே சாவடிக்கிறாங்க..’ எனச்சொல்லும் காவல் நிலையங்கள் மீதான குற்றச்சாட்டைத் தன் அனுபவத்தில் உணர்ந்த திருநல்லமுருகன், அதனை நிரூபிக்க முயற்சித்திருப்பார் போலும்!