பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் மூன்று மாதங்களாக மூடப்பட்டு, போராட்டமெல்லாம் நடந்தன. தற்போது பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுவிட்டன.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தியது. அதில், பேரியம் மூலப்பொருள் இல்லாமல், புதிய மூலப்பொருட்களைக்கொண்டு பட்டாசுகளைத் தயாரித்து சோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. தற்போது பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் பட்டாசு ரகங்களைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், இந்தத் தேர்தலில் பட்டாசு விவகாரத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்திருக்கின்றனர். ஏனென்றால், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்குகள் லட்சக்கணக்கில் உள்ளன.
சிவகாசியில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் “மோடி அரசு பட்டாசுத் தொழிலை நீதிமன்ற வாசலிலே நிறுத்தி, நீதிமன்றத்தின் பெயரைச் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டாசுத் தொழிலாளர்களை எப்படி கொடுமைப்படுத்தியது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். பட்டாசுத் தொழிலுக்கு மூடுவிழா நடத்தினார்கள். தற்போது, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் தேர்தலை மையமாகக் கொண்டு இடைக்காலமாக திறக்கப்பட்டுள்ளது. இடைக்காலம் என்பது இந்த மாதமும் அடுத்த மாதமும் மட்டும்தான்.
ஜி.எஸ்.டி.யால் தத்தளிக்கின்ற சிவகாசி தொழிலும், விருதுநகர் தொழிலும், சாத்தூர் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஜி.எஸ்.டி.யானது, ஒரே ஜி.எஸ்.டி.யாக, எளிமையான ஜி.எஸ்.டியாக மாற்றப்படும். ரூ.1000 ரேசன் கடையில் தந்துவிட்டால், மக்கள் அதிமுக அரசுக்கு ஆதரவாளராக மாறிவிடுவீர்கள் என்று மக்களை சாதாரணமாக எடைபோடுகிறார்கள். நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கு இரண்டு அரசுகளை வீட்டுக்கு அனுப்பும். ஒன்று மத்தியில் உள்ள மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும். மற்றொன்று தமிழகத்தில் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்பும்.” என்றார்.
காங்கிரஸ் வேட்பாளரின் குற்றச்சாட்டுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதிலடி தந்திருக்கிறார். “மாணிக்கம் தாகூர் பொய் சொல்கிறார். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிமுக நிர்வாகிகளாகவா இருக்கிறார்கள்? பட்டாசு உரிமையாளர்களிடம் உண்மை நிலையைக் கேட்டுப் பாருங்க. பட்டாசு ஆலைகள் எந்தச் சூழ்நிலையிலும் மூடுவதற்கு வாய்ப்பே கிடையாது. பட்டாசு ஆலைகள் திறந்தே இருக்கும். தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கோர்ட் உத்தரவெல்லாம் வாங்கியாச்சு. மாணிக்கம் தாகூர் ஐந்து வருடங்கள் காணாமல் போய்விட்டு இப்போது வந்து கேட்கிறார். இதற்கான பதில் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருக்கிறது. இனி எந்தக்காலத்திலும் பட்டாசு ஆலைகளை பூட்டவே மாட்டார்கள். அடுத்து நான் இங்கேதான் இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்கு கேட்க வேண்டும். சட்ட மன்றத்துக்கும் ஓட்டு கேட்க வேண்டும். பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுவிட்டால், அடுத்து ஓட்டு கேட்க என்னை விடுவார்களா? நீ மாற்றி மாற்றி பேசுகிறாய் என்று என்னைக் கேட்க மாட்டார்களா? பட்டாசுத் தொழிலுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவோம்.” என்கிறார்.
தொகுதியின் பிரதான பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களின் ஆதரவைப்பெற முயற்சிப்பது சரிதானே!