Skip to main content

பத்து ஆண்டுகள் கழித்து நடந்த பழிக்குப்பழி கொலை! அதிர்ச்சியில் காவல்துறை! 

 

viluppuram district police

 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). அரசுப் பள்ளி சத்துணவு பொறுப்பாளராகவும், திமுக இளைஞரணி உறுப்பினராகவும் இருந்தவர். இவரது மனைவி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் கடந்த 11ம் தேதி காலை திருச்சிற்றம்பலம் கூட்-ரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திண்டிவனம் டி.எஸ்.பி அபிஷேக் குப்தா (பொறுப்பு), ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. மேலும், ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி மனோஜ் சங்கர் (20), சரஸ்வதி (28), இவரது சகோதரி சாந்தி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையான ஜெயக்குமார் ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சங்கர்(40), கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, ஒரு கும்பல் சங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சங்கர் கொலை சம்பந்தமாக ஆராவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆலங்குப்பம் அருகில் உள்ள ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் வரும்போது அந்த வாகனமும், கொலை செய்யப்பட்ட சங்கர் உறவினரின் இருசக்கர வாகனமும் குயிலா பாளையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

 

இதில் மணிகண்டன் தனது வாகனத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளார். அதற்கு சங்கர், மணிகண்டனை கோட்டை கரைக்கு அழைத்து சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு, மணிகண்டனை தாக்கியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ஏழு பேர் கும்பலுடன் சேர்ந்து சங்கரை கோவில் திருவிழாவின் போது கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மணிகண்டன், தமிழ்வேந்தன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதில், தமிழ் வேந்தன் ஜெயக்குமாரின் தம்பி ஜெய்சங்கரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர ஜெயக்குமார் உதவி செய்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த தமிழ் வேந்தன், இறந்த சங்கரின் மனைவி சரஸ்வதியிடம் ‘உனது கணவர் சங்கரை கொலை செய்து விட்டோம். உங்களால் என்ன செய்ய முடிந்தது’ என்று சவால் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சரஸ்வதி, தனது தங்கை கணவரான குமரவேலிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். இதனால் தமிழ் வேந்தன் மீது சங்கர் குடும்பத்தினர்,  மேலும் ஆத்திரம் கொண்டிருந்தனர்.

 

இதற்கெல்லாம் காரணம் ஜெயக்குமார் தான் எனவே அவரை கொலை செய்ய குமரவேல் தரப்பு முடிவு செய்தது.  ஜெயக்குமாரை கொலை செய்ய முடிவு செய்த குமரவேல், சந்துரு என்பவரை கூட்டு சேர்த்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் பெண்வீட்டார் மறுப்பு தெரிவித்து அப்போது, ஜெயக்குமார் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சந்துரு ஜெயக்குமார் கொலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

ஜெயக்குமார் கொலை சம்பந்தமாக மனோஜ் சங்கர் (20), சரஸ்வதி (28), இவரது சகோதரி சாந்தி(40) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், குமரவேல் - சந்துரு ஆகிய இருவரும் நேற்று காலை கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆரோவில் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஏழுமலை, சரஸ்வதி உறவினர், கருவடிக்குப்பம் குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.